வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்: தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?


வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்: தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?
x

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று எல்லா இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள்.

திருப்பத்தூர்

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று எல்லா இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள்.

வடமாநிலக்காரர்கள்

தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்களில் முன்பு எல்லாம் மண்வாசனையை நுகர முடியும். அதாவது அங்கு வேலை செய்யும் ஆண், பெண் இருபாலரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசுகிற தமிழே அதை அடையாளம் காட்டும்.

இன்று அந்த நிறுவனங்களில்கூட திக்கித்திக்கி இந்தி கலந்து தமிழ் பேசுகிற வட மாநிலத்தவரை காண முடிகிறது.

அதாவது பானி பூரி விற்பதில் தொடங்கி, கட்டிட வேலைகள், மெட்ரோ பணிகள், ஓட்டல் வேலைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், இறைச்சி கடைகள், மீன் வெட்டுதல், முடி வெட்டுதல் என அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டனர்.

சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் பரவி விட்டனர்.

திணித்துக்கொள்கிறோம்

இந்தி திணிப்பை எதிர்த்துவரும் நாம், இந்திக்காரர்களை நமக்கு நாமே திணித்து கொண்டிருக்கிறோம். இதை ஆதங்கப்பட்டோ பொறாமைப்பட்டோ கூறவில்லை. அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நாம் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும். குறைந்த சம்பளம் என்றாலும் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள். அதை வரவேற்றுத்தான் தீரவேண்டும்.

நம்மவர்கள் என்ன செய்கிறார்கள்? பசி வயிற்றில் இருந்தால்தானே அவர்களுக்கு வேலையில் பக்திவரும்? இலவசங்கள் அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டதாக யாரை கேட்டாலும் சொல்கிறார்கள்.

அர்ப்பணிப்பு இல்லை

எந்த வேலை என்றாலும் நம்மவர்கள் கூடுதல் சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளை குறைந்த நேரம் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அர்ப்பணிப்பு குணம் குறைந்து போய்விட்டது. 'இஷ்டம் இருந்தால் வேலை தா! இல்லை என்றால் போ!' என்ற மனநிலையில் இருக்கிறார்கள். கிராமங்களில்கூட இந்த நிலைதான் இருக்கிறது.

அதனால்தான் நம்மவர்கள் இருந்தும் வடமாநில தொழிலாளர்களுக்கு நாமே சிவப்பு கம்பளம் விரிக்க நேருவதாக சொல்கிறார்கள்.

இதுபற்றி பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதை காண்போம்.

விடுமுறை எடுப்பதில்லை

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க செயற்குழு உறுப்பினர் கே.எஸ். உதயசங்கர்:-

முதலில் கட்டிட தொழில் செய்யத்தான் வடமாநிலத்தவர்கள் தமிழகத்துக்கு வந்தனர். மொசைக், மார்பிள், கிரானைட், டைல்ஸ் பதிக்கும் தொழில்நுட்பத்தில் அவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள். தற்போது கொத்தனார், சித்தாள் என்று தொழில்களை கற்றுக்கொண்டார்கள். பள்ளிகொண்டா, ஆற்காட்டில் உள்ள எனது ஓட்டல்களில் அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். தந்தூரி, சைனீஸ், பாஸ்ட்புட் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். வடமாநிலங்களை விட இங்கு வேலை நேரம் குறைவு, சம்பளம் அதிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில ஆண்டுகளாக இங்கு தங்கியிருந்து வாடிக்கையாளர்கள் விரும்பும் சுவையில் உணவு வகைகளை வழங்கி வருகிறார்கள். ஆண்டிற்கு ஓரிரு முறை மட்டுமே சொந்த ஊருக்கு செல்கின்றனர். மற்ற சமயங்களில் பெரும்பாலும் விடுமுறை எடுப்பதில்லை. தமிழகத்தை சேர்ந்த பரோட்டோ, தோசை, டீ உள்ளிட்ட அனைத்து மாஸ்டர்களும் நன்றாக பணிபுரிகிறார்கள். ஆனால் அவர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்து கொள்வார்கள். அதனால் ஒரே மாதிரியான சுவையில் உணவு வகைகளை வழங்குவதில் பாதிப்பு ஏற்படும். மேலும் தற்போது பணிபுரியும் ஓட்டலைவிட பிற ஓட்டலில் சற்று அதிகமாக ஊதியம் வழங்கினால் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் வேலையை விட்டுவிட்டு அங்கு சென்று சேர்ந்து விடுவார்கள். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் இவ்வாறு செய்வது கிடையாது. இதன் காரணமாகவே வட மாநில தொழிலாளர்களை வேலையில் சேர்க்கிறோம்.

நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள்

காட்பாடியை சேர்ந்த பில்டர்ஸ் உரிமையாளர் அசோக்குமார்:-

என்னுடைய கட்டுமான நிறுவனத்தில் தமிழர்களும், வட மாநில தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். நம்முடைய தொழிலாளர்கள் சில நேரங்களில் திடீரென நின்று விடுவார்கள். போன் செய்து கேட்டால் தான் தகவல் தெரிவிப்பார்கள். அதனால்தான் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளோம். அவர்களுக்கு நம்ம தொழிலாளர்களை விட சம்பளம் குறைவு. இருந்தாலும் நேரம், காலம் பார்க்காமல் உழைக்கிறார்கள். இதனால் நாம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடப் பணிகளை முடிக்க முடிகிறது. அதுபோல நம்முடைய தொழிலாளர்களும் உழைத்தால், நம்முடைய தொழிலாளர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம்.

ஆற்காட்டை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஜெமினி ராமச்சந்திரன்:-

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாகவே உள்ளது. வடமாநிலத்தினர் நகைக்கடை, எலக்ட்ரிக் கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள், டீக்கடைகள், பாணி பூரி கடைகள் ஆகியவற்றை முதலில் வாடகைக்கு கடை எடுத்து கடை நடத்தி வருகின்றனர். ஒரு சில ஆண்டுகளிலேயே சொந்தமாக இடம் வாங்கி கட்டிடம் கட்டி அந்த இடத்தில் கடை நடத்துகின்றனர். இது போன்ற கடைகள் ஆற்காடு பகுதியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் வட மாநில தொழிலாளர்கள் கட்டிடப் பணி, சாலை பணிகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.

பாதுகாப்பற்ற சூழ்நிலை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.ஆதம்:-

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்வது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கக் கூடிய செயலாகும். அறிமுகம் இல்லாத வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைப்பதும், குடியமர்த்துவதும் ஏற்புடையதல்ல. இது அமைதியாக இருக்கும் நம் தமிழக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கக்கூடிய செயலாக இருக்கிறது. வடமாநில தொழிலாளர் ஒருவர் இங்கு குற்ற செயலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடும் பட்சத்தில் அவரை தேடிப் பிடிப்பது என்பது சவாலாகவே இருக்கும். எனவே முடிந்தவரை வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் நம் பகுதியை சேர்ந்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதுதான் சரியான செயலாக இருக்கும்.

வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்களை பற்றிய அனைத்து விவரங்களையும், ஆதாரங்களையும் அந்தப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவுசெய்து அவர்களை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். எனவே கூடிய வரை நம் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து ஊக்கம் அளிப்பதே சாலச் சிறந்த செயலாகும்.

அன்பாக நடத்துகிறார்கள்

பீகாரை சேர்ந்த தச்சுத்தொழிலாளி திலீப்:-

நான் பீகார் மாநிலத்தில் உள்ள பீகுசாகர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தேன். இங்கு அனைவரும் மிகவும் அன்பாக நடத்துகிறார்கள். உணவு, கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது. பீகாரில் வேலை குறைவு, சம்பளமும் குறைவு. இங்கு தமிழ்நாட்டில் தினமும் வேலை உள்ளது. எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரை கூலி கிடைக்கிறது. இங்கு எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. போலீசார் தொந்தரவு கிடையாது. தமிழ்நாடு அனைத்து விதத்திலும் மிகச் சிறப்பாக உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மிகவும் நன்றாக உள்ளது. என்னைப் போன்ற தச்சுத்தொழிலாளிகள் மற்றும் பெயிண்டர்கள், நகை செய்யும் தொழிலாளிகள் திருப்பத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தமிழ்நாடு மிகவும் சிறப்பாக உள்ளது.

குறைந்த அளவு கூலி

ஆரணியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி.குமார்:-

கடந்த சில வருடங்களாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஆரணி பகுதிகளில் குடியேறி நெல், அரிசி உற்பத்தி செய்யும் தொழிலில் கூலி தொழிலாளர்களாக பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் டீ விற்கும் தொழிலாளர்களாகவும் வந்தனர். தற்போது இரும்பு வியாபாரம், ஹார்டுவேர், பல் பொருள் அங்காடி, ஸ்டேஷனரி, ஜவுளி, ரெடிமேடு ஷோரூம், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை என அனைத்து தொழில்களிலும் வட மாநிலத்தவர்கள் கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் கடைகளுக்கு அதிக அளவில் அட்வான்ஸ், வாடகை தருவதால் நம் பகுதியை சேர்ந்தவர்கள் நிரந்தரமாக தொழில் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இதே நிலை நீடித்தால் அவர்கள், நம் பகுதியில் உள்ள நிலங்களையும், அங்காடிகளையும் வாங்கி குவிக்கும் நிலை உருவாகும். அதற்கு முழு காரணமும் நாம் தான். நம் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணி செய்வதில்லை. ஆனால் வட மாநிலத்தவர்கள் முழு நேரமும் கொடுத்த பணியை முழுமையாக நிறைவேற்றி வருகிறார்கள்.

திருவண்ணாமலையை சேர்ந்த ஒப்பந்ததாரர் துரை.வெங்கட்:- வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தமிழகம் முழுவதும் நிரம்பி உள்ளனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் கேட்கும் கூலியை விட குறைந்த அளவு கூலியை பெற்று கொள்கிறார்கள். இதனால் பலர் வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்து கொள்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டிடம், சாலை பணி, உள்கட்டமைப்பு பணிகள் இவைகளில் ஈடுபட்டு வந்த தமிழக தொழிலாளர்கள் தற்போது 100 நாள் வேலைக்கு சென்று வருகின்றனர். சில பணிகளுக்கு தமிழக தொழிலாளர்கள்தான் தேவைப்படுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட பணிகளுக்கு அவர்கள் வருவதில்லை. இதனால் காண்டிராக்ட் தொழில் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடிவதில்லை. எனவே வட மாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்கள் திரும்ப பெற்று அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய பணி வாய்ப்புகளை செய்துதர முன் வர வேண்டும்.

வங்கி அதிகாரி ஆதங்கம்

வங்கிகளில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் குறித்து பெயர் சொல்ல விரும்பாத வங்கி ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கி மேலாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் வடமாநிலத்தவர்கள் பணியாற்றியதால், சரியாக தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்களே அந்த வங்கியை பூட்டி சீல் வைத்த சம்பவம் நடந்து உள்ளது. வட மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் வங்கி தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை அவர்களே தயாரிப்பதாக ஒரு தகவல் உள்ளது. மேலும், அவர்களின் தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதும் வாய்ப்பும் உள்ளதால், வங்கி துணை அதிகாரிகள் பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வாகின்றனர்.

இவ்வாறு தேர்வாகி வரும் வடமாநிலத்தவர்களுக்கு வங்கிகள் குறித்த புலமையும், ஆங்கில புலமையும் குறைவாகவே இருக்கும். இதனால், தமிழக வங்கி பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலும், வங்கிகளின் தலைவர்கள், செயல் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் வடமாநிலத்தவர்களே இருப்பதால் பதவி உயர்விலும் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வடமாநிலத்தவர்கள் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தமிழ் மொழி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்க முடியாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஆனால், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளின் குளறுபடிகளால் இது போன்று தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஆராய வேண்டும்

இந்தியை ஏற்க மறுக்கிறீர்கள், இந்திக்காரர்கள் வருவதை மறுக்காமல் மவுனமாக இருக்கிறீர்களே ஏன்? என்று சிலரிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

சிலர் என் பிள்ளைகளை எல்லாம் இந்தி படிக்க வைக்கிறேன் என்று பெருமையாக சொல்கிறார்கள். தாராளமாக படிக்க வையுங்கள். ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு எல்லாம் வேண்டாம். எங்களிடம் கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்று இந்தியை திணிக்காதீர்கள்.

உலகம் சுற்ற ஆங்கிலம் போதும். தமிழ்நாட்டில் தாய்மொழி போதும். எங்கள் பிள்ளைகள் ஒருவேளை வடமாநிலங்களுக்கு வேலைக்கு போக நேர்ந்தால் மும்பை தமிழர்களைப் போல் பேசப் பழகிக்கொள்வார்கள். இந்தி படித்தால் எதிர்காலமும், வேலை வாய்ப்பும் இருக்கும் என்று கருதுகிறீர்கள். அப்படி என்றால் இந்தி படித்தவர்கள் எல்லாம் வேலை தேடி ஏன் தெற்கே ஓடிவருகிறார்கள்?.

இந்தியை ஏற்றுக்கொண்டால் நமது தாய்மொழியின் புழக்கத்தை அது நீர்த்துப்போக செய்யும். அண்டையில் இருக்கும் கர்நாடக மாநிலமும், வடக்கே இருக்கும் மேற்குவங்காள மாநிலமும் அதை இப்போதுதான் உணர்ந்து வருகின்றன. அதை முன்கூட்டியே உணர்ந்துதான் நம்மவர்கள் இந்தியை ஏற்கவில்லை.

இந்திக்காரர்களை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. பிழைப்பு தேடி வந்து இருக்கிறார்கள். உழைக்கிறார்கள். அந்த உழைப்பு நமது நாட்டுக்கு உதவியாக இருக்கிறது. நம்மவர்கள் பிழைப்புதேடி மும்பை போகவில்லையா? கர்நாடகம், கேரளா போகவில்லையா? அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும்.

அதேநேரம் அவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே போவதை தமிழக அரசு கண்டுகொள்ளாமலும் இருந்துவிடக்கூடாது. அவர்களின் வருகையால் ஏற்பட்டு இருக்கும் தாக்கம், பெருகி இருக்கும் குற்றம், நமது வேலைகளைச் செய்ய நம்மிடம் தொழிலாளர்கள் இல்லையா? இருந்தால் ஏன் அவர்கள் அதைச் செய்ய முன்வருவது இல்லை? என்ற கோணங்களிலும் ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story