கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லையா? நிதி அமைச்சரின் கருத்துக்கு, இ.பெரியசாமி பதில்


கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லையா? நிதி அமைச்சரின் கருத்துக்கு, இ.பெரியசாமி பதில்
x

கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லையா? என்று நிதி அமைச்சரின் கருத்துக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பதில் அளித்தார்.

திண்டுக்கல்,

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன் உள்பட ரூ.35 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்டும் அதிக அளவில் வந்துள்ளது. அந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் எந்த வங்கியிலும் கடன் பெறலாம் என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம். மாநில அளவிலான விழாவில் இதுகுறித்து அறிவிப்பு வர இருக்கிறது.

மேலும் கூட்டுறவு ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டு இருக்கின்றனர். அதற்கான நிதியை அரசிடம் எதிர்பார்க்காமல், லாபத்தில் இருந்து மாத ஓய்வூதியம் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதற்கும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் இ.பெரியசாமியிடம், கூட்டுறவுத்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

மக்களும், முதல்-அமைச்சரும் திருப்தி

வெளிப்படை தன்மையில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். குறைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கு, என்ன நடந்தது என்று கூறினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். எங்கே தவறு நடந்தது? என்று அவரிடம் கேளுங்கள். மக்கள் திருப்தி அடைவதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களும், முதல்-அமைச்சரும் திருப்தி அடையவேண்டும். அதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம்.

வேறு யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் 50 ஆண்டு கால அரசியலில் இருக்கிறேன். இவர் (அருகில் இருந்த அமைச்சர் அர.சக்கரபாணியை காண்பித்து) 35 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறார். தொடர்ந்து 6 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களின் வேலை. நாங்கள் மக்களின் வேலைக்காரர்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். மக்களுக்கு திருப்தி ஏற்பட வேண்டும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ரேஷன்கடையைதெரியாதவர்கள்

ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் இருக்கின்றனர். நாங்கள் யாரிடமும் பாகுபாடு பார்த்தது இல்லை. கூட்டுறவு என்பது மக்களுக்கான இயக்கம். கூட்டுறவுத்துறை மக்களுக்காக உருவாக்கப்பட்டது. உணவுத்துறையும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான். இந்த துறைகளில் எங்கேயாவது குறை இருக்கிறது என்று கூறினால் உங்களை மாலை போட்டு வரவேற்று, குறைகளை சரிசெய்து திருப்திபட்டு கொள்வோம்.

மக்கள் தான் திருப்தியை பற்றி கூறவேண்டும். ஒருவேளை ரேஷன்கடையை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என்பதை பற்றி கவலையில்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை. மக்களும், முதல்-அமைச்சரும் திருப்தியாக இருக்கின்றனர். பொதுநல நோக்கோடு அரசியலுக்கு வந்தோம். திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறோம். வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று செய்தது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story