திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள 15 வீடுகளுக்கு நோட்டீஸ்
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள 15 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவில் இடம் ஆக்கிரமிப்பு
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்றுப் பாதை திட்டம் மலைக்கோவிலில் இருந்து அமிர்தாபுரம் வரை செயல்படுத்த இந்து அறநிலை துறை உத்தரவிட்டது.
இதனையடுத்து, முருகன் கோவில் செயல் அலுவலர் விஜயா தலைமையில், வருவாய்த்துறையினர், வனத்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் மாற்றுப்பாதை அமைக்கப்படவுள்ள இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மடம் கிராமத்தில் 15 வீடுகள் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வீடுகளுக்கு நோட்டீஸ்
இதனையடுத்து, முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள 15 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் எவ்வித அனுமதியும், முகாந்திரமும் இன்றி அத்துமீறி ஆக்கிரமித்தது பல ஆண்டுகளாக பயன்படுத்தியது தெரியவந்தது. தங்களது இச்செயல் திருக்கோயில் நலனுக்கும், இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு விரோதமானதாகும். எனவே அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தவறினால் சட்ட விதிகளின்படி ஆக்கிரமிப்பு இடத்திலிருந்து வெளியேற்றவும், அதற்கான செலவுகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாங்கள் பூர்வீகமாக இந்த இடத்தில் வசித்து வருவதாகவும், கோவில் நிர்வாகம் திடீரென காலி செய் என்று சொன்னால் குடும்பத்துடன் எங்கே செல்வது என்று புரியவில்லை என அப்பகுதியில் வசிக்கும் மக்கள், கண்ணீர் மல்க தெரிவித்தனர்.