சமையல் அறையை தூய்மையாக பராமரிக்காததால் நோட்டீஸ்
மயிலாடுதுறையில் உள்ள ஓட்டலில் சமையல் அறையை தூய்மையாக பராமரிக்காததால் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நோட்டீஸ் வழங்கினார்.
மயிலாடுதுறையில் உள்ள ஓட்டலில் சமையல் அறையை தூய்மையாக பராமரிக்காததால் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நோட்டீஸ் வழங்கினார்.
உணவில் கரப்பான் பூச்சி
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்றுமுன்தினம் தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தலை சேர்ந்த வக்கீல் பூபாலன் (வயது 36), கலியமூர்த்தி (58) ஆகிய 2 பேரும் உணவு சாப்பிட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஓட்டலில் ஆய்வு
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதியின் கவனத்திற்கு சென்றது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்புதுறை அலுவலர் சீனிவாசன் நேற்று அந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தார்.
உணவில் கிடந்தது கரப்பான்பூச்சி இல்லை என்றும், அது வெட்டுக்கிளி என்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த ஆய்வில் சமையல் அறையை தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என்பதும், சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
நோட்டீஸ்
இதனையடுத்து உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் 7 நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்து அறிக்கை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.