இடமாறுதல் உத்தரவு தயார் செய்த காவல்துறை அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
இடமாறுதல் உத்தரவு தயார் செய்த காவல்துறை அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே எண்டியூரை சேர்ந்தவர் திருவேங்கடம். போலீஸ் ஏட்டான இவர், கடந்த 2022-ம் ஆண்டு முதல் மயிலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட அவர் கடந்த நவம்பர் மாதம் 3-ந் தேதி இறந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 27-ந் தேதி 44 போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் கையெழுத்திட்ட உத்தரவு நகல் வெளியானது. அதில் திருவேங்கடத்தை மயிலத்தில் இருந்து திண்டிவனத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சக போலீசார் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா விசாரித்தபோது, 3 ஆண்டுகள் பணி முடிந்த போலீசாருக்கு பொது பணியிட மாறுதல் தயார் செய்யப்பட்டதும், அதில் தவறுதலாக இறந்த ஏட்டு திருவேங்கடத்தின் பெயரும் இடம்பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, பணியில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்ததாக, இடமாறுதல் உத்தரவு தயார் செய்த மாவட்ட காவல் அலுவலக அலுவலர் பழனிவேல் என்பவருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நோட்டீசு அனுப்பியுள்ளார். மேலும், பழனிவேல் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.