நீர்வளத்துறை என்ஜினீயர்கள் உள்பட 6 பேருக்கு நோட்டீஸ்
ஆண்டியப்பனூர் ஊராட்சி பகுதிகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை என்ஜினீயர்கள் உள்பட 6 பேருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
ஆண்டியப்பனூர் ஊராட்சி பகுதிகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை என்ஜினீயர்கள் உள்பட 6 பேருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
2 என்ஜினீயர்களுக்கு நோட்டீஸ்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரிமலைக்கு அடுத்து இரண்டாவது சுற்றுலா தலமாக ஆண்டியப்பனூர் அணை விழங்கி வருகிறது. தொடர் மழையின் காரணமாக இந்த அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று ஆண்டியப்பனூர் அணை பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆர்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணையின் மேம்பாட்டு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
மேலும் அணை தூய்மையாக பராமரிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. மேலும் அணையை சுற்றிலும் கால்நடைகள், விலங்குகள் இருந்தன. இதை கண்ட கலெக்டர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்
அதனை தொடர்ந்து ஆண்டியப்பனூர் ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணியை அவர் ஆய்வு செய்தார். அப்போது இப்பணி தாமதமாக தொடங்கப்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், உதவி பொறியாளர் தொட்டலாம்பாள், பணிமேற்பார்வையாளர் தாமரைகண்ணன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மிட்டூரில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உணவு வழங்கும் பட்டியல்படி உணவு தயார் செய்யப்படவில்லை என்பது தெரிவந்தது. அதன்காரணமாக விடுதி காப்பாளர் விஜயகுமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.
ரேஷன் பொருட்கள்
மேலும் குரிசிலாப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் லட்சுமி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மாவு மில் மற்றும் கடலை, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த பொருட்களின் விவரங்கள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் முருகேசன், உமா, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், மணவாளன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் சக்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.