வெல்லம் உற்பத்தி கூடங்களுக்கு நோட்டீஸ்


வெல்லம் உற்பத்தி கூடங்களுக்கு நோட்டீஸ்
x

கலப்படம் செய்த வெல்லம் உற்பத்தி கூடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

வேலூர்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் வெல்லத்தில் கலப்படம் செய்வதை தடுக்கவும், வெல்லம் உற்பத்தி கூடங்களில் ஆய்வு நடத்தவும், கலப்படம் செய்யும் உற்பத்தி கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் மற்றும் சிலர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கந்தனேரி, கவசம்பட்டு, முடினாம்பட்டு, சின்னச்சேரி, வெட்டுவானம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்லம் உற்பத்தி கூடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தரமாக உள்ளதா, அவற்றில் சுண்ணாம்பு அல்லது சர்க்கரை மற்றும் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் 11 வெல்லம் உற்பத்தி கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கந்தனேரி, கவசம்பட்டு வெல்லம் உற்பத்தி கூடத்தில் வெல்லம் தயாரித்து தூய்மையான இடத்தில் வைக்காதது, கலப்படம் உள்ளிட்டவற்றுக்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட வெல்லம் மதுரையில் உள்ள உணவு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனையில் வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தால் அந்த கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story