கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு நடந்த இந்த நூதன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பெரம்பலூர் ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் சாந்தப்பன் (வேப்பூர்), வேலு (வேப்பந்தட்டை) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், செயலாளர் பால்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் வாழ்த்துரை வழங்கினார். இதில் கலந்து கொண்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் காலி தட்டை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையும், சமூக நலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி சமூக நல இயக்குனர் பரிந்துரைத்துள்ள சட்ட பூர்வ ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்கிட வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கையில் காலி தட்டேந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முத்துசாமி வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.