பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம்


பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், நாடுகாணி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர், நாடுகாணி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம் நடைபெற்றது.

குண்டும், குழியுமான சாலை

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் வரை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பிணிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சாலையை சீரமைக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை கண்டித்தும், சாலையை சீரமைக்க கோரியும் தேசிய நெடுஞ்சாலையில் வாழை கன்றுகள் நடும் போராட்டம் நடத்தப்படும் என நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத்தினர் அறிவித்தனர். போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு வாழை கன்றுகளை ஏந்தியவாறு நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத்தினர் நேற்று தேசிய நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நூதன போராட்டம்

இதற்கு இயக்க தலைவர் சாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜ் முன்னிலை வகித்தார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த கேத்தீஸ்வரன், முபாரக், சாதிக் பாபு, முருகன், ரசாக், அமீர், ரஞ்சித் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறும்போது, தரமற்ற சாலைகளை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணிகளை ஊழல் தடுப்பு போலீசார் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

இதேபோல் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நாடுகாணி பஜாரில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின் கம்பத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் உருவ பொம்மையை கட்டி வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நவ்பல் தலைமை தாங்கினார். ரவிக்குமார், சுதர்சன், ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story