காங்கிரசார் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்


காங்கிரசார் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்
x

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து நெல்லையில் காங்கிரசார் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து நெல்லையில் காங்கிரசார் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனு கொடுத்து போராட்டம்

அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், தச்சநல்லூரில் உள்ள காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் வாயில் கருப்பு துணியை கட்டியிருந்தனர். தொடர்ந்து தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டவர்கள் காந்தி சிலையிடம் மனு அளித்தனர்.

அதில், ''பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ராகுல்காந்திக்கு தண்டனை விதித்து அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை ரத்து செய்ய பிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்க வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.

பின்னர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறுகையில், ''ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து அறவழியில் இந்த மவுன போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து ராகுல்காந்தி பேசுவதை தடுக்கவே அவரது பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயக படுகொலை. இதனால் மக்கள் போராட்டம் தொடரும். இந்த போராட்டம் மக்களால் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்க ஏதுவாக அமையும்'' என்றார்.

மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் முருகன், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், பி.வி.டி.ராஜேந்திரன், பரணி இசக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூடுதாழை

உவரி அருகே கூடுதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கடந்த 11-ந்தேதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடற்கரை பந்தலில் போராட்டக்குழு தலைவர் ரொசிங்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினர்.


Next Story