எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகையில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசுகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,2 மற்றும் 3-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆடல், பாடல் விளையாட்டுகள் மூலம் கல்வி கற்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் குழந்தைகளின் திறமைகளை வெளி கொண்டு வர முடியும். எண்ணும் எழுத்தும் வகுப்பறை வண்ணமயமாக இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்று வருகின்றனர். 2023-24-ம் கல்வியாண்டில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இ்ந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமானது வருகிற 2025-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் அறிவை பெறுவதை உறுதி செய்வதாகும் என்றார். இதில் உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.