தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சியினை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சியினை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.

எண்ணும் எழுத்தும் திட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதற்கட்ட பயிற்சி தொடக்க நிகழ்ச்சி ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

கொரோனா காலகட்டத்தில் மாணவ, மாணவிகளின் கற்றல் இடைவெளியை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கினார்.

1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் மனநிலைக்கேற்ப நாடக வடிவில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும், நடன வடிவிலும், கருத்தரங்கம் மூலமாகவும் எளிதாக கல்வியை கற்றுக்கொள்ளும் வகையில், இத்திட்டம் தொடங்கப்பட்டு அதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் பணி

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டம் குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்ப கல்வியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த ஆண்டு 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி எளிய முறையில் மாணவ, மாணவிகளின் மனநிலைக்கேற்ப கல்வி கற்பிக்க உள்ளது.

இது மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சி அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு யூனியனிலும் 120 ஆசிரியர்கள் விதம் 11 யூனியனில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். அதற்கேற்ப ஆசிரியர்களின் பணி அமைய வேண்டும். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், சாந்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட், முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சேகர், வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story