நுங்கம்பாக்கம் மயான பூமி 3 மாதங்களுக்கு இயங்காது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
நுங்கம்பாக்கம் மயான பூமி 3 மாதங்களுக்கு இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயானபூமியின் மின் தகனமேடை திரவ பெட்ரோலிய வாயு தகனமேடையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை முதல் மே 15-ந்தேதி வரை 3 மாதங்களுக்கு நுங்கம்பாக்கம் மயானபூமி இயங்காது.
எனவே, மேம்பாட்டு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதே போல் பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட புழுதிவாக்கம் மயானபூமியில் உள்ள எரிவாயு தகனமேடையும் திரவ பெட்ரோலிய வாயு தகனமேடையாக மாற்றம் செய்திடும் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 20-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 55 நாட்களுக்கு புழுதிவாக்கம் மயானபூமி இயங்காது.
எனவே, மேம்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட தில்லை கங்கா நகர் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.