தனியார் ஆஸ்பத்திரியில் தூக்கில் நர்சு பிணம்


தனியார் ஆஸ்பத்திரியில் தூக்கில் நர்சு பிணம்
x

கும்பகோணம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் தூக்கில் நர்சு பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் தூக்கில் நர்சு பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நர்சு

தஞ்ைச மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மணலூர் திருமாந்துறை தோப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகள் வைஷ்ணவி (வயது 22). இவர், நர்சிங் படித்து முடித்து விட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.வைஷ்ணவி வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் நர்சுகள் தங்கி பணிபுரிய அறைகள் உள்ளன. இந்த தங்கும் அறையில் சக நர்சுகளுடன் வைஷ்ணவியும் தங்கியிருந்து சில மாதங்களாக அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

தூக்கில் பிணம்

நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்ற வைஷ்ணவி நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் வைஷ்ணவி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கில் வைஷ்ணவி பிணமாக தொங்கினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், கும்பகோணம் மேற்கு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வைஷ்ணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இது குறித்து தகவல் அறிந்த வைஷ்ணவியின் உறவினர்கள், ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். மேலும் வைஷ்ணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story