போக்குவரத்து வசதி கேட்டு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் செவிலியர்கள் மனு
போக்குவரத்து வசதி கேட்டு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் செவிலியர்கள் மனு அளித்தனர்.
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பணியாற்றும் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வருவதற்கு பஸ் போக்குவரத்தையே சார்ந்துள்ளனர். இந்நிலையில் அரியலூரில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புறவழிச்சாலைக்கு மாற்றப்பட்டு தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பல்வேறு ஊர்களில் இருந்து பணிக்கு வரக்கூடிய செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். இதனால் செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர முடியாத சூழலும் காணப்படுகிறது. எனவே தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.