நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கீழ்பென்னாத்தூர் அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நர்சிங் கல்லூரி மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செங்கம் அடுத்த மணிக்கல் புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்நிதி. இவர் பெங்களூருவில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.
இவரது மகள் கோதைலட்சுமி (வயது 24). இவர் கீழ்பென்னாத்தூர் அருகே சோ.புதூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிக் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை
2 நாட்கள் விடுமுறை காரணமாக கல்லூரி விடுதியில் தங்கி இருந்த பெரும்பாலான மாணவிகள் சொந்த ஊருக்கு சென்றனர்.
சில மாணவிகள் மட்டும் சொந்த ஊருக்கு செல்லாமல் விடுதியில் தங்கி இருந்தனர். கோதைலட்சுமி இருந்த அறையில் அவர் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
தனியாக இருந்த அவர் நேற்று இரவு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு சாப்பிட கோதைலட்சுமி வராத காரணத்தால் சில மாணவிகள் அவரது அறைக்கு சென்றபோது கோதை லட்சுமி தூக்கில் தொங்கியதை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவலை உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினருக்கு தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.
பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கோதைலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.