ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்
கடலூரில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்து மாத விழா
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் "போஷான் மா" எனப்படும் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, தீவிர ரத்த சோகையை தடுக்கும் நோக்கில் குடற்புழு நீக்கம், கை கழுவுதல், தன் சுத்தம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று 90 நாட்களுக்கு அனீமியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழிப்புணர்வு
பின்னர் கலெக்டர் பாலசுப்பிரமணியம், ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுவோம் என்ற தலைப்பில் ஒரு மாத காலம் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தை, கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் குழந்தைகள் மையத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் விரைவில் ஆரோக்கியம் பெறும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் ஆரோக்கியமான வீட்டுத்தோட்டம் குறித்து குழந்தைகளின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு முருங்கை, கொய்யா, எலுமிச்சை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார் மற்றும் அனைத்து வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.