விழுப்புரத்தில்ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணிகலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
விழுப்புரத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற ஊட்டச்சத்து இரு வார நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று காலை ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் சி.பழனி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
முன்னதாக ஊட்டச்சத்தின் அவசியத்தை உணர்த்திடும் வகையில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிவா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மனோசித்ரா, ராஜலட்சுமி, ஜெகதீஸ்வரி, ஜென்சி, டயானா, நந்திதா, சவுமியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.