ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் காணாமல் போய்விடுவார்கள்
எடப்பாடி பழனிசாமியை அழிக்க நினைக்கும் ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் காணாமல் போய்விடுவார்கள் என்று தேனியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார்.
ஆலோசனை கூட்டம்
மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தேனி மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தேனியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
செல்வாக்கு இல்லாதவர்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் வாங்கினர். தனக்கு கிடைத்த பதவி போய்விட்டது என்ற காரணத்தால் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.
பின்னர் இயக்கம் ஒன்றிணைய வேண்டும் என்ற முடிவு எடுத்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தனக்கு துணை முதல்-அமைச்சர், நிதி அமைச்சர் பதவியோடு, வீட்டுவசதி வாரியமும் வேண்டும் என்றார். அதையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். ஆனால், கட்சியின் ஆட்சிக்கு ஆபத்தான சூழலில் இடைத்தேர்தல் நடந்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. சொந்த ஊரில் செல்வாக்கு இல்லாத ஓ.பன்னீர்செல்வம் அடுத்த பதவிக்கு வர ஆசைப்படலாமா?
காணாமல் போய்விடுவார்கள்
எதிரியை கூட விட்டுவிடலாம். துரோகியை விட்டுவிடவே கூடாது. துரோகியை அழித்தே ஆக வேண்டும். எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். ஜெயலலிதாவை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்த ஆர்.எம்.வீரப்பன் எப்படி காணாமல் போய் முகவரியின்றி இருக்கிறாரோ? அதேபோன்று எடப்பாடி பழனிசாமியை அழிக்க நினைக்கும் ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் காணாமல் போய்விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒருபக்க மீசை
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஓ.பன்னீர்செல்வத்தையும், தினகரனையும் நான் கேட்கிறேன். உண்மையில் உங்களுக்கு தனியாக கட்சி ஆரம்பித்து கட்சி நடத்திவிடுங்கள். நாங்கள் ஒருபக்கம் மீசை எடுத்துக்கொள்கிறோம். அல்லது கட்சியில் இருந்து ஓடிப் போய்விடுகிறோம். எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தி துரோகிகளின் முகத்திரையை கிழிப்போம்" என்றார்.
இந்த கூட்டத்தில், அமைப்பு செயலாளரும் எம்.எல்.ஏ.வு மான ராஜன்செல்லப்பா, அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.பி. பார்த்திபன், மாவட்ட துணைச்செயலாளர் சற்குணம், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், போடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாலசுப்பிரமணி, மத்திய ஒன்றிய பொறுப்பாளர் முத்துப்பாண்டியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர, நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.