ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பயங்கர மோதல்: அ.தி.மு.க. தலைமை அலுவலகம் போர்க்களமானது


ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பயங்கர மோதல்: அ.தி.மு.க. தலைமை அலுவலகம் போர்க்களமானது
x

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனால் அக்கட்சி அலுவலகம் போர்க்களம் போன்று காட்சி அளித்தது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல்போக்கு உண்டானது. இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை பதவிக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கால் இந்த கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா?. நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும்? என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும் காணப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நேற்று காலை 6 மணி முதல் வானகரத்தில் குவிய தொடங்கினர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் காலை 7 மணி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வர தொடங்கினர்.

கற்கள் வீச்சு, நாற்காலிகள் பறந்தன

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு வருகை தர உள்ளார் என்ற தகவல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு கிடைத்தது. இதையடுத்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் படையெடுக்க தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து அங்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. பின்னர் அது கலவரமாக வெடித்தது. இந்த சமயத்தில் அ.தி.மு.க. அலுவலகத்தில் குறைந்த அளவிலான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடினார்கள்.

இந்த நிலையில் இருதரப்பினரும் மாறி, மாறி கற்களை வீசி தாக்கி கொண்டனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்த செங்கல் கற்களை ஒருவர் வெளியே வீச, அதனை எடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை நோக்கி வீசப்பட்டது. கிரிக்கெட் மட்டை, உருட்டுக்கட்டை போன்றவற்றாலும் அடித்துக் கொண்டனர். ஒரு சிலருக்கு கத்தி வெட்டும் விழுந்தது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம் சென்னை அடையார் கிரீன்வேயிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 7.40 மணியளவில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை நோக்கி புறப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் வருகை

ஓ.பன்னீர்செல்வம் வருவதற்கு முன்பு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் உள் நுழைவுவாயில் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து அதிரடியாக கட்சி அலுவலகத்துக்கு உள்ளே புகுந்தனர். கட்சி அலுவலகத்தில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வீசினார்கள். கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை கற்களை வீசி கிழித்தனர். மேலும் அவரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்தெறிந்தனர்.

மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு வழங்கப்பட்டுள்ள வழக்கமான போலீஸ் பாதுகாப்பு, தனியார் பாதுகாவலர்கள், ஆதரவாளர்களுடன் காலை 8.50 மணியளவில் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவர் வந்த வாகனத்திலும் ரத்த கறை போன்று சிவப்பு நிறம் படிந்திருந்தது.

58 பேர் காயம்; வாகனங்கள் சேதம்

ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் வந்தவுடன் வழக்கம்போல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகளை வணங்கினார். பின்னர் கட்சி அலுவலகத்துக்கு சென்ற அவர், மாடியில் இருந்து தொண்டர்களை நோக்கி இரட்டை விரலை நோக்கி காண்பித்தார். அ.தி.மு.க. கொடியையும் கையில் ஏந்தினார்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் வந்த பின்னர் இரு தரப்பினர் இடையே மோதல் மேலும் வலுத்தது. கட்சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப் பட்டன. எடப்படி பழனிசாமி ஆதரவாளர்கள் வந்திருந்த 2 பஸ்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த மோதல் சம்பவத்தில் மனோஜ்குமார், பாலாகிருஷ்ணன் ஆகிய 2 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி அசோக், கே.பி.கந்தன் உள்பட58 பேர் காயம் அடைந்தனர். இதில் 9 பேர் பெண்கள் ஆவார்கள். இரவு பணி முடிந்து வெள்ளை சட்டை அணிந்தபடி அந்த சாலை வழியாக சென்ற ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டார். காயம் அடைந்தவர்களில் 33 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். 25 பேர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் சிலர் சிகிச்சை பெற சென்றனர்.

144 தடை உத்தரவு

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிலைமை மோசமானதால் போலீஸ் துணை கமிஷனர்கள் பகலவன், தீஷா மித்தல் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து வன்முறை சம்பவங்கள் காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அப்பகுதியில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில் 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்தனர். இதையடுத்து அந்த சாலையில் 4 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு வளையத்துக்குள் அப்பகுதி கொண்டுவரப்பட்டது. இந்த சமயத்தில் வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி படம் கிழிப்பு

அதே வேளையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை அட்டையை செருப்பால் அடித்தும், தீ வைத்தும் கொளுத்தினர். ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை கட்சி அலுவலகத்தில் உள்ள தூணில் கட்டி வைத்தனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட தகவலறிந்தும், கட்சி அலுவலகத்தில் பெண்கள் படுத்து புரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது சில தொண்டர்கள் சோர்வடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்சு வாகனத்தை வரவழைத்து அதில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே மோதல் அடங்கிய பின்னர், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுவதும் செருப்புகளும், கற்களும், உருட்டுக்கட்டைகளும் கிடந்தன. உடைக்கப்பட்ட நாற்காலிகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இந்த நாற்காலிகளை அ.தி.மு.க. அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் சோகத்துடன் அகற்றினர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலால் அப்பகுதி போர்க்களம் போன்று காட்சி அளித்தது.


Next Story