ஓ.பன்னீர்செல்வம் இப்போது நடத்துவது துரோக யுத்தம் முன்னாள் அமைச்சர் ஆவேசம்
ஓ.பன்னீர்செல்வம் இப்போது நடத்துவது துரோக யுத்தம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
தேனி,
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க.வினர் பலர் ஆர்ப்பாட்டத்துக்காக தேனியில் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
துரோக யுத்தம்
தேனி மாவட்டம் விசுவாசமிக்க மாவட்டம். இந்த மாவட்டத்திலும் சில நேரத்தில் துரோகிகள் வந்து விடுகிறார்கள். அவரை (ஓ.பன்னீர்செல்வம்) நம்பி தானே ஜெயலலிதா இத்தனை பொறுப்புகளை கொடுத்தார். அவர் ஏற்கனவே நடத்தியது தர்மயுத்தம்.
இப்போது நடத்துவது துரோக யுத்தம். அவர் தர்மயுத்தம் நடத்தியபோது அவரை நம்பி சென்றவர்கள் இப்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டார்கள். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வரும் முன்பு சொன்னது ஒன்றாகவும், இப்போது அவர்கள் செய்வது ஒன்றாகவும் உள்ளது. இந்த ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.