சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. கொடிகளை பயன்படுத்த எதிர்ப்பு-போலீசில் புகார்
சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு அ.தி.மு.க. கொடிகளை பயன்படுத்த அக்கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
அ.தி.மு.க. கொடிகள்
சேலம் டவுன் திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஓ.பி.எஸ். அணியின் முக்கிய தலைவர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருந்தனர். இதற்காக திருவள்ளுவர் சிலை பகுதியில் சிலர் அ.தி.மு.க. கொடிகளை கட்டிக்கொண்டிருந்தனர்.
அப்போது, இதுபற்றி தகவல் அறிந்த மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் பகுதி செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அவர்கள் அ.தி.மு.க. கொடிகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மேலும், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீசில் புகார்
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசனிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துவிட்டது. இதனால் நாங்கள் தான் உண்மையான கட்சியினர். எனவே சம்பந்தம் இல்லாமல் அ.தி.மு.க. கொடிகளை பயன்படுத்தும் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு அ.தி.மு.க. கொடிகளை பயன்படுத்த அக்கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.