திருமங்கலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
திருமங்கலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு, செல்லம்பட்டி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து அ.ம.மு.க., ஓ.பி.எஸ். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுதரக்கோரியும், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க. அரசை கண்டித்தும் நடைபெற்றது.
திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மதுரை தெற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வுமான அய்யப்பன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது:-
எடப்பாடி பழனிசாமியிடம் தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு உசிலம்பட்டியில் போட்டியிடட்டும், அங்கு வந்து எடப்பாடி பழனிசாமியும் ஓட்டு சேகரிக்கட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருமங்கலத்தில் போட்டியிடுகிறேன். எனக்கு ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்கட்டும். யார் வெற்றி பெறுகிறார்? என்று பார்ப்போமா என்று பகிரங்கமாக சவால் விட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன், திருமங்கலம் நகரச் செயலாளர் ராஜாமணி உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.