"உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
சென்னை,
சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள். எனவே அனைத்து துறைகளுமே கேட்டு வாங்கிக் கொண்டார். அனைத்து பதவிகளையும் என்னிடம் இருந்து பறித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். உலக கோடிஸ்வரர் வரிசையில் இருப்பவர் போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் பார்த்திருப்போம், ஆனால் இவர் வசூல் ராஜா ஓபிஎஸ்.
சசிகலா, டிடிவி தினகரனுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளிவரட்டும், பிறகு நான் கருத்து தெரிவிக்கிறேன்.
திமுக பொறுப்பேற்ற பிறகு அடாவடி வசூல், கட்டப்பஞ்சாயத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஆகியவை தொடர்கதையாகி வருகின்றன. முதல்-அமைச்சரால் கட்சி நிர்வாகிகளை கூட அடக்க முடியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. சர்வாதிகார போக்கு ஆளுங்கட்சியினரிடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.