திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் வலிமையை காட்டுவோம் - ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் வலிமையை காட்டுவோம் - ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x

திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் வலிமையை காட்டுவோம் என ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திருச்சி

திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் வலிமையை காட்டுவோம் என ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனிப்பாதையில் பயணித்து வருகிறார். சமீபத்தில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டதைதொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து தங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து கூறுவதற்காகவும், வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது பலத்தை காண்பிப்பதற்காகவும் திருச்சியில் வருகிற 24-ந் தேதி முப்பெரும் விழா மாநாடு நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

இதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி பிரீஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கொள்கைபரப்பு செயலாளர்கள் புகழேந்தி, மருதுஅழகுராஜ், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தலைமை பொறுப்பு

அ.தி.மு.க.வை தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பை யார்? ஏற்க வேண்டும் என்பதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கான உரிமையை எம்.ஜி.ஆர். வழங்கி இருந்தார். அந்த சட்ட விதிகளை ஜெயலலிதாவும் கட்டி காத்தார். எம்.ஜி.ஆர். 3 முறை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்துக்கு பல நல்லதிட்டங்களை வழங்கினார். ஜெயலலிதா 16 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராக இருந்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சி பொற்காலம் என சொல்லும் அளவுக்கு திறம்பட ஆட்சி நடத்தினார். கட்சியையும் ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிய எதிர்க்கட்சிகளையெல்லாம் சமாளித்து 30 ஆண்டுகாலம் ஜெயலலிதா அ.தி.மு.க.வை காவல்தெய்வமாக நின்று காத்து வந்தார்.

சர்வாதிகாரத்தின் உச்சநிலை

ஆனால் தற்போது சர்வாதிகாரத்தின் உச்சநிலைக்கு சென்று கொல்லைப்புறமாக நுழைந்து அரசியல் நடத்துகிற ஒரு கூட்டம் இந்த இயக்கத்தை தவறான வழியில் நடத்தி வருகிறார்கள். 1972-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது, அவர் எண்ணத்தின் உணர்வின் அடிப்படையில் தான் தலைமை பொறுப்புக்கு வருபவர்களை தொண்டர்கள் தான் உருவாக்க வேண்டும் என்ற விதியை வகுத்தார்.

இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக இருப்பதே மிகப்பெரிய மரியாதை என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கினார். அதனால் தான் அவருக்கு 1½ கோடி தொண்டர்களும் பொதுச்செயலாளர் என்ற உச்சபட்ச மரியாதையை தந்தார்கள். ஆனால் ஒரு கூட்டம் ஜெயலலிதாவுக்கு வழங்கிய பொதுச்செயலாளர் என்ற அந்த உச்சபட்ச மரியாதையை கூட அபகரித்துள்ளனர்.

வலிமையை காட்டுவோம்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் தொண்டர்களுக்கு வழங்கிய உரிமையை யார்? தடுத்தாலும் அதை தடுக்கிற சக்தியாக தான் இன்று தர்மயுத்தம் தொடங்கி இருக்கிறோம். இறுதியில் வெல்லப்போவது நாம் தான். நமக்கு மக்களின் ஆதரவும் இருக்கிறது. அதை வரலாற்றில் பதிய வைக்கிற நாள் தான் வருகிற 24-ந் தேதி. அன்றைய தினம் நமது வலிமையை தமிழகம் மட்டுமல்ல இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் இந்த உலகுக்கு காட்டுவோம். அது தான் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் நாம் காட்டும் நன்றி கடன். அ.தி.மு.க. நமக்காக உருவான இயக்கம் என்பதை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிலையில் கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்களில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி வைத்து இருந்தனர்.

சட்ட போராட்டம்

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டப்படி எங்கள் பக்கம் தான் நியாயம் இருக்கிறது. மக்களை சந்தித்து நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என நிரூபிப்போம். வருகிற 24-ந் தேதி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கிற மாநாடாக இந்த மாநாடு அமையும்.

எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும். சட்டப்போராட்டத்தில் உறுதியாக 1½ கோடி தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள். எம்.ஜி.ஆர்.காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தை நடத்துவோம். அனைவரையும் ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் பயணிப்போம்.

சசிகலாவுக்கு அழைப்பா?

1½ கோடி தொண்டர்களின் குரலாக நாங்கள் ஒலிக்கிறோம். தொண்டர்கள் நினைத்தால் எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். தமிழக அரசின் செயல்பாடு குறித்து இந்த மாநாட்டில் கருத்து தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டிற்கு சசிகலாவை அழைப்பீர்களா? என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.


Next Story