வில்வராயன் கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்கள்
வத்திராயிருப்பு அருகே வில்வராயன் கண்மாயை கருவேலமரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே வில்வராயன் கண்மாயை கருவேலமரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
வில்வராயன் கண்மாய்
வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வில்வராயன் குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை நம்பி 800-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் முறையாக பராமரிக்காததால் கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் முளைத்து கண்மாய் இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டது. இதனால் மழைக்காலங்களில் கண்மாய்க்கு வரும் தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் வீணாக செல்கிறது. ஆதலால் இந்த கண்மாயை நம்பி உள்ள விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குற்றச்சாட்டு
தற்போது வடகிழக்கு பருவமழையால் இந்த கண்மாய்க்கு 75 சதவீதம் தண்ணீர் வந்துள்ளது. தண்ணீர் முழுவதும் பாசிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் இருப்பதால் தற்போது நிரம்பிய தண்ணீர் படிப்படியாக குறைந்து கொண்டே செல்கிறது எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயினை முறையாக பராமரிக்கவும், தண்ணீர் வற்றிய பிறகு தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.