மகன் காதல் திருமணம் செய்ததால் போலீஸ்காரரின் தந்தை உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு


மகன் காதல் திருமணம் செய்ததால் போலீஸ்காரரின் தந்தை உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
x

தேனி அருகே சமுதாய கட்டுப்பாட்டை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால் போலீஸ்காரரின் தந்தை உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி

தேனி அருகே சமுதாய கட்டுப்பாட்டை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால் போலீஸ்காரரின் தந்தை உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடக்கம் செய்ய எதிர்ப்பு

தேனி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவருக்கு அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமோஸ் ஆகிய 4 மகன்கள். இதில், அருளானந்தம் தேனி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகனான ஆரோன் கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். கோட்டூரில் காதல் திருமணம் செய்வதற்கு ஊர் கட்டுப்பாடு உள்ளது. ஆனால் அந்த கட்டுப்பாட்டையும் மீறி ஆரோன் காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜான்பீட்டர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய உடலை அதே ஊரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் ஜான்பீட்டரின் மகன் ஆரோன் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக ஒரு தரப்பினர் கூறியதுடன், ஜான்பீட்டரின் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜான்பீட்டரின் உடல், அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, ராஜேஷ் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஜான்பீட்டரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story