வாடகை நிர்ணயிக்காமல் வசூலிப்பதற்கும் ஆட்சேபம்:நகராட்சிகளில் தெருவோர கடைகளை முறைப்படுத்தாதது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
நகராட்சிகளில் தெருவோர கடைகளை முறைப்படுத்தாதது ஏன்? என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை மதுரை ஐகோர்ட்டு எழுப்பியது.
நகராட்சிகளில் தெருவோர கடைகளை முறைப்படுத்தாதது ஏன்? என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை மதுரை ஐகோர்ட்டு எழுப்பியது.
தெருவோர கடை வாடகை
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாரத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருவோர கடைக்காரர்களிடம் வாடகை வசூலிப்பதற்கான டெண்டர் கடந்த மார்ச் மாதம் விடப்பட்டது. அப்போது இந்த டெண்டரை மயில்வாகனம் என்பவருக்கு நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. இந்த டெண்டர் வெளிப்படை தன்மையுடன் நடக்கவில்லை. எனவே இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த டெண்டரை பெற்ற மயில்வாகனம் தாக்கல் செய்த மனுவில், டெண்டருக்கான மொத்தத் தொகையில் ரூ.57,14,408-ஐ செலுத்தி விட்டேன். மீதமுள்ள தொகையை செலுத்துவதற்கான கெடுவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
குழு அமைக்கப்பட்டுள்ளதா?
இந்த 2 மனுக்களையும் நீதிபதி புகழேந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தெருவோர கடை வசூல் டெண்டர் நிலுவைத் தொகை ரூ.34,78,536-ஐ மயில்வாகனம் கடந்த 5-ந் தேதி செலுத்திவிட்டார் என்பதால் அவரது வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இந்த டெண்டர் அறிவிப்பில் நகராட்சியில் எந்தெந்த இடங்களில் தெருவோர கடைகள் அமைக்கலாம் என்றும், அந்த கடைகளுக்கு எவ்வளவு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கவில்லை.
தெருவோர கடைகளை நடத்துவது சம்பந்தமாக பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் தெருவோரக் கடைகள் முறைப்படுத்தப்பட்டதா? அவற்றை ஒழுங்குபடுத்தும் குழு உள்ளதா?
* ஒவ்வொரு நகராட்சியிலும் தெருவோர கடைகளுக்கான இடம் மற்றும் தெருவோரக் கடைகள் அமைக்கக்கூடாத இடம் ஆகியவை அடையாளம் காணப்பட்டதா?
அனுமதிப்பது எவ்வாறு?
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளில் இருந்தும் தெருவோரக் கடைகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதா?
* ராமநாதபுரம் நகராட்சியில் தெருவோர கடைகளுக்கான சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் வாடகை வசூலிக்க டெண்டர் எடுத்தவரை எதன் அடிப்படையில் நகராட்சி இயக்குனர் அங்கீகரித்தார்?
* தெருவோரக் கடைகளுக்கான சான்றிதழ் வழங்காமலும், தெருவோர கடைகளுக்கான எண்ணிக்கை வரையறை இல்லாமலும், வாடகை நிர்ணயம் செய்யாமலும், எதன் அடிப்படையில் காண்டிராக்டர்கள் நகராட்சிகளில் வாடகை வசூலிக்கிறார்கள்?
* தெருவோரக் கடைகளுக்கான சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறி எத்தனை நகராட்சியில் டெண்டர் விடப்பட்டுள்ளது? இந்த டெண்டர் நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் எவ்வாறு கண்காணிக்கின்றனர்?
மேற்கண்ட கேள்விகளுக்கு தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.