புதிய இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு:பவானி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
புதிய இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
பவானி
புதிய இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தினசரி மார்க்கெட்
பவானியில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வரும் இடம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்டதாகும்.
பின்னர் அவர்கள் பவானி அடுத்துள்ள மூவேந்தர் நகர் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் காலியாக இருந்த இடத்தில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. 35 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. அதனால் ரூ.3 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
வாக்கெடுப்பு
இந்தநிலையில் தினசரி மார்க்கெட் கட்டிடத்தை அதே பகுதியில் கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதியில் கட்ட வேண்டும் என்றும் கூறி வந்தனர். அதனால் கடந்த 3 மாதங்களாக நகராட்சி நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து நகராட்சி கவுன்சிலர்கள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து கவுன்சிலர்களும் தற்போது இயங்கி வரும் இடத்திலேயே புதிய கட்டிடம் கட்ட ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கடையடைப்பு
இந்தநிலையில் வியாபாரிகளில் ஒரு தரப்பினர் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். மேலும் நகராட்சி ஆணையாளரிடம் காய்கறி விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் டி.ஏ.மாதேஸ்வரன் தலைமையில், புதிய இடத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என்று மனு கொடுத்தனர்.
தினசரி மார்க்ெகட் கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.