கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அறச்சலூரில் கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அறச்சலூரில் கடைகள் அடைக்கப்பட்டன.

கீழ்பவானி வாய்க்கால்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மண்ணால் கட்டப்பட்ட இந்த வாய்க்காலில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மேலும் வாய்க்காலில் ஆங்காங்கே கசிவு ஏற்படுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் போதுமான அளவு செல்வதில்லை என்ற புகார் எழுந்து வருகிறது. இதையடுத்து மண்ணால் ஆன வாய்க்காலை கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

குளம் குட்டைகள் காய்ந்துவிடும்

விவசாயிகளில் ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கான்கிரீட் வாய்க்காலாக மாற்றினால் தண்ணீர் கசிவு இன்றி ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகள் காய்ந்துவிடும் என்றும், மேலும் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து மாவட்டம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறுகின்றனர். குறிப்பாக கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் திட்டங்களை நம்பி உள்ள 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக மாறிவிடும் என்பதால் கான்கிரீட் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் நேற்று கீழ்பவானி பாசன விவசாயிகள் ஏராளமானோர் திரண்டு வந்து, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து விவசாயிகள் தனித்தனியாக கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

எதிரான அரசாணை

விவசாயிகள் கொடுத்த மனுக்களில் கூறி இருந்ததாவது:-

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. கடந்த ஆட்சியில் போடப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி பாசன சபைக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். பழைய கட்டுமானங்களில் மட்டும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். புதிதாக எந்த இடத்திலும் கான்கிரீட் அமைக்க கூடாது.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறி இருந்தனர்.

விவசாயிகள் அதிக அளவில் கூடியதால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அறச்சலூரில் கடையடைப்பு

இந்தநிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அறச்சலூர், வடபழனி, முகாசி அனுமன்பள்ளி, வடுகப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதன் காரணமாக அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story