செயற்கை நீர்வீழ்ச்சியை கண்டறிய கண்காணிப்புக்குழு அமைப்பு கலெக்டர் தகவல்


செயற்கை நீர்வீழ்ச்சியை கண்டறிய கண்காணிப்புக்குழு அமைப்பு  கலெக்டர் தகவல்
x

இயற்கை நீரோடையை தனியார் ஆக்கிரமித்து செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டதா? என்பதை கண்டறிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இயற்கை நீரோடையை தனியார் ஆக்கிரமித்து செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டதா? என்பதை கண்டறிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செயற்கை நீர்வீழ்ச்சி

சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொது நலவழக்கில் கடந்த 23-ந் தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், தனியார் வசம் உள்ள எஸ்டேட் மற்றும் ரிசார்ட் போன்ற நிறுவனங்கள், தனிநபர்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை நீரோடைகளின் நீர்ப்பாதையை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது.

மேலும் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்திய தனியார் எஸ்டேட் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ள இடங்களை கண்டறிந்து சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்காணிப்புக்குழு அமைப்பு

அதன்படி, குமரி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா உள்பட 7 உறுப்பினர் கொண்ட கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

எனவே குமரியில் உள்ள தனியார் எஸ்டேட் மற்றும் ரிசார்ட் போன்றவற்றில் சுற்றுலாபயணிகளை கவரும் நோக்கத்தில் இயற்கையாக பாயும் நீரின் வழித்தடத்தினை மாற்றி செயற்கையான நீர்வீழ்ச்சிகளாக சட்ட விரோதமாக மாற்றி அமைக்கும் செயல்களுக்கு அலுவலர்கள் எவரேனும் உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டால் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலக இலவச எண் 1077 மற்றும் தொலைபேசி எண் 04652- 231077 -ல் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) வருகிற 9-ந் தேதி வரை புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story