மோட்டார் சைக்கிளை வேகமாக இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு; 10 பேர் கைது
மோட்டார் சைக்கிளை வேகமாக இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளை வேகமாக இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனிப்படை
மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அதன்படி வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை மேற்கொண்டனர்.
10 பேர் கைது
அப்போது சொக்கிகுளம், வல்லபாய் மெயின் ரோட்டில் வாலிபர்கள் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்தும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி இடையூறு செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று 5 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர்.
அதில் சிந்தாமணி மதன்(வயது 21), அவரது தம்பி கார்த்திக்(20), சிந்தாமணி தினேஷ்குமார்(24), செல்லப்பாண்டி(22), உசிலம்பட்டி சுரேஷ்(26), அனுப்பானடி ஹேமபிரபு(24), ஆழ்வார்புரம் முகம்மது இம்ரான்(19), முகமது ஆசிக்(19), மகாத்மா காந்திநகர் லோகேஸ்வரன் (19), கிருஷ்ணாபுரம் காலனி ரமணா(19) என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 10 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள், ஒரு கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.