ஓடத்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பங்கேற்பு
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பங்கேற்பு
ஓடத்துறை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டம்
உள்ளாட்சி தினத்தையொட்டி நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவுக்கு உள்பட்ட ஓடத்துறை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஓடத்்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சத்துணவு
இதைத்தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சிறப்பிக்க வேண்டும். கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவிக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணி முடிவுற்ற விவரத்தை கிராம சபைக்கு தெரிவிக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, குழந்தைகள் சரியாக வளர்க்காமல் இருப்பது கண்டறிந்து அவர்களுக்கு சத்துணவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
கண்காட்சி அரங்கு
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, உதவி இயக்குனர் சூர்யா, இணை இயக்குனர் சின்னசாமி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நர்மதா செயற்பொறியாளர் விஸ்வநாதன் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.