பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் யானைகள் நடமாட்டம்பாதுகாப்பாக செல்லுமாறு மீனவர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை


பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் யானைகள் நடமாட்டம்பாதுகாப்பாக செல்லுமாறு மீனவர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
x

மீனவர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு

பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றின் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிப்பு தொழில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக தினமும் பகல் நேரங்களில் மீனவர்கள் வந்து நீர்த்தேக்க பகுதிகளில் வலைகளை விரித்து வைத்துவிட்டு செல்கிறார்கள். மீண்டும் மறுநாள் அதிகாலை அங்கு சென்று வலையில் சிக்கிய மீன்களை பிடிப்பது வழக்கம்.

யானைகள் நடமாட்டம்

பவானிசாகர் அணையையொட்டியுள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் ஏராளமாக உள்ளன. இவைகள் கூட்டமாக தினமும் மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க வருகின்றன. அதன் பின்னர் வனப்பகுதிக்கு செல்லாமல் இரவு முழுவதும் விடிய விடிய பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் நடமாடிக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.

இதனால் தினமும் அதிகாலை நேரத்தில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து பவானிசாகர் வனச்சரகர் சிவகுமார் கூறும்போது, 'அணையின் மேல்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மற்றும் அணையை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.


Next Story