பாடத்திட்டத்தையும் தாண்டி மாணவர்களின் திறமை ஊக்குவிக்கப்படுகிறது


பாடத்திட்டத்தையும் தாண்டி மாணவர்களின்  திறமை ஊக்குவிக்கப்படுகிறது
x

பள்ளிகளில் படிக்கும்பொழுதே, படிப்பையும் தாண்டி மாணவ- மாணவிகளின் திறமைகள் ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருப்பத்தூர்

பள்ளிகளில் படிக்கும்பொழுதே, படிப்பையும் தாண்டி மாணவ- மாணவிகளின் திறமைகள் ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கலைத்திருவிழா

திருப்பத்தூர் அரசு மாதிரிப்பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள். க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உக்குவிக்கப்படுகிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2022-23-ஆம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற 3,250 மாணவ- மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டியில் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு பரிசுகளை பெற இருக்கிறார்கள். பள்ளிகளில் படிப்பது தேர்வு எழுதுவது என்பது அரசாங்கத்தின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். பள்ளி பாடத்திட்டத்தையும் தாண்டி மாணவ- மாணவிகள் தங்களது திறமைகளை, கலை நயத்தினை, பேச்சு திறமைகள் பள்ளிகளில் படிக்கும் பொழுதே ஆசிரியர்களால் ஊக்கிவிக்கப்படுகிறது.

படிக்கின்ற காலங்களில் மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தமிழக முதல்-அமைச்சர், பாடத்திட்டத்தையும் தாண்டி அனைத்து மாணவ- மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை நடத்தி வருகிறார். தமிழனுடைய கலாசாரம், பண்பாடு, சரித்திரம், தொன்மைகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு கலை உலகம் உதவியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

1,500 மாணவ- மாணவிகள்

அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கலந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலவங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 279 அரசு பள்ளிகளில் படிக்கின்ற 1,500 மாணவ, மாணவிகள் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு தங்களின் கலை திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) எஸ்.ராஜா அண்ணாமலை, (தனியார் பள்ளிகள்) பி.வேதபிரகாஷ், (தொடக்கப்பள்ளி) எ.எஸ்.அமுதா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரபாகரன், நகர மன்ற தலைவர்கள் சங்கீதா, காவியா, ஒன்றியத் குழு தலைவர்கள் திருமதி, பி.சங்கீதா, ஆலங்காயம் பேரூராட்சி தலைவர் வெ.தமிழரசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story