முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை
பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் திரளான ஆசிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் மாலை 4.20 மணி முதல் 5.30 மணி வரை அலகுத்தேர்வு (சிறப்பு தேர்வு) நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். தேர்வு எழுதிய விவரங்களை இ.எம்.ஐ.எஸ். இணையதளத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்ய பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை மாலை 5 மணிக்கு மேல் அலுவலகத்திற்கு வரச்செய்வது கண்டிக்கத்தக்கது.
மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது தலைமை ஆசிரியர்களை ஒருமையில் திட்டுவதை நிறுத்த வேண்டும். சிறப்பு தேர்வை முடித்த பிறகு தொலைதூரத்தில் உள்ள வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். எனவே இதுபோன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
கண்டன கோஷங்கள்
கூட்டமைப்பு அமைப்பாளர் பென்னட் ஜோஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கனகராஜ் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் வேலவன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுரேஷ், மூட்டா நிர்வாகி மகேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி கல்வி அலுவலக சாலையில் ஏராளமான ஆசிரியர்கள் குவிந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் சுமார் 1 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மனு
நாகர்கோவில் மேயர் மகேஷிடம் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், 'குமரி மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி முருகன் மாணவர்கள் நலன் என்ற பெயரில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் தேர்வுகள் நடத்தக்கூறி வினாத்தாள்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார். ஆசிரியர்களுக்கு பெரும் பாட சுமை மத்தியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை முடிக்கவே போதிய நேரமின்றி அவதிப்படுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களை காலை 8.30 மணிக்கே பள்ளிக்கு வர சொல்லியும், அவ்வாறு வராத மாணவர்களை தண்டிப்பதும் தொடர்கதையாக உள்ளது. எனவே அவர் தன் செயல்முறைகளை திரும்ப பெறாவிடில் போராட்டம் நடத்த ஆசிரியர்கள் தயாராக உள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் பேசி நல்ல முடிவு அறிவிக்க கேட்டு கொள்கிறோம்' என்று குறிப்பிட்டு உள்ளனர்.