மாற்று பயிர்களை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும்- வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தல்


மாற்று பயிர்களை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும்- வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தல்
x

மாற்று பயிர்களை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும் ஏன் வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:-

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே எம்பாவை கிராமத்தில் உள்ள வயல்களில் கதரி 18:12 என்ற ரக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வயல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திர அரசின் விவசாய கல்லூரியில் உருவாக்கப்பட்ட இவ்வகையான நிலக்கடலை பயிர் அனைத்து வகையான பருவங்களிலும் சாகுபடி செய்ய ஏற்றதாக விளங்குகிறது. ஏக்கருக்கு 1,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தவகை நிலக்கடலையை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். மேலும், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, கம்பு, கேழ்வரகு, எள், மக்காச்சோளம் உள்ளிட்ட மாற்று பயிர்களை விவசாயிகள் பயிரிட முன்வர வேண்டும். இதற்காக தமிழக அரசின் வேளாண்மை துறை பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக வேளாண்மை துறை அலுவலர்களை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண்மை உதவி அலுவலர் அலெக்சாண்டர், உதவி அலுவலர் (விதைகள்) அசோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story