அதிக விலைக்கு உரம் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து - வேளாண் இணை இயக்குனர்
திருவாரூரில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூரில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சம்பா- தாளடி சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் 85 ஆயிரத்து 887 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 53 ஆயிரத்து 450 எக்டேர் பரப்பளவில் தாளடி சாகுபடியும் செய்யப்பட்டு உள்ளது. 65 நாட்களான சம்பா நெற்பயிர்களுக்கு உரமாக யூரியாவினை விவசாயிகள் தெளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் யூரியா தட்டுப்பாடு இருந்து வருவதாகவும், தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுவதாகவும், இடுபொருட்களை வாங்கினால் தான் யூரியா கொடுப்பதாகவும் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து புகார்கள் எழுந்து வந்தது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன் தலைமையில் 10 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தனியார் உரக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அதிக விலைக்கு விற்பனை
இதில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த பெரும்பண்ணையூர், நன்னிலம், மன்னார்குடி போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் 6 தனியார் உரக்கடைகள் மற்றும் ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றிற்கு ஒரு வாரத்திற்கு உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக வேளாண் இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'நவம்பர் மாதம் வரை திருவாரூர் மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 330 டன் யூரியா தேவை இருப்பதாகவும், 7221 டன் இதுவரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. தனியார் மற்றும் அரசிடம் சேர்த்து மொத்தம் 2611 டன் இருப்பு உள்ளது. மேலும் இன்று (நேற்று) காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு 1400 டன் யூரியா வந்துள்ளது. தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வதாக புகார் வந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்' என்றார்.