வளர்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை- கணிப்பாய்வு அலுவலா்
திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கணிப்பாய்வு அலுவலா் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கணிப்பாய்வு அலுவலா் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
கணிப்பாய்வு கூட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை ஆணையருமான நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
ஆய்வு கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் பேசியதாவது:- தமிழக அரசின் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அதன் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சி பணிகள்
மேலும் நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் பள்ளி கல்வி துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும், எழுத்தும் திட்டம் பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.