தோட்டக்கலை உதவி அலுவலர் பணியிடை நீக்கம்
கிராம நிர்வாக அதிகாரி வேலைக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான தோட்டக்கலை உதவி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
கிராம நிர்வாக அதிகாரி வேலைக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான தோட்டக்கலை உதவி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
தோட்டக்கலை உதவி அலுவலர்
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள வலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதம் (வயது55). இவர் கோட்டூரில் தோட்டக்கலை உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் உள்பட 3 பேர் சேர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டையை அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்த எல்லப்பனிடம் அவரது மகன் மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் பெற்றுள்ளனர்.
பின்னர் பணம் கொடுத்தவர்களுக்கு கிராம நிர்வாக அதிகாரி வேலை கிடைத்ததாக கூறி எல்லப்பனிடம் பணி ஆணையை வழங்கி உள்ளனர். ஆனால் இது போலி பணி ஆணை என தெரிய வந்ததால், எல்லப்பன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை அவர்கள் திருப்பி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், எல்லப்பன் புகார் செய்தார். இதையடுத்து வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி, போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்த நபர்கள் மீது திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலதண்டாயுதத்தை நேற்று முன்தினம் திம்மாம்பேட்டை போலீசார் திருவாரூர் வந்து திருப்பத்தூருக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை கைது செய்தனர். மோசடி வழக்கில் கைதானதால் பாலதண்டாயுதத்தை திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.