வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க அலுவலர்கள் வீடு, வீடாக ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தெகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க வீடு, வீடாக அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர்.
இரட்டை பதிவு
இந்திய தேர்தல் ஆணையம் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்படி உத்தரவிட்டுள்ளது. அதேபோல் எந்தவித குறைபாடும் இல்லாமல் வாக்காளர் பட்டியலை தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இறந்த வாக்காளர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.
அதேநேரம் வேலை, தொழில் உள்பட பல்வேறு காரணங்களால் இடம்மாறி செல்லும் வாக்காளர்கள், புதிய இடத்திலும் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விடுகின்றனர். ஆனால் பழைய முகவரியில் இருக்கும் பதிவை நீக்கம் செய்வதற்கு தவறி விடுகின்றனர். இதனால் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் ஏற்பட்டு விடுகின்றன.
ஆதார் இணைப்பு
இந்த இரட்டை பதிவுகளை கண்டுபிடித்து நீக்குவது பெரும் சவாலாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் எண்ணையும் பட்டியலுடன் இணைக்கும் முயற்சியில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் இரட்டை பதிவுகளை எளிதில் கண்டறிந்து நீக்கம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.
எனினும் வாக்காளரின் விருப்பத்தின் பேரில் மட்டுமே ஆதார் இணைப்பு பணி நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 7 தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 892 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களின் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடக்கிறது.
இதனை தீவிரப்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, ஆதார் விவரத்தை சேகரிக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேற்று முதல் வீடு, வீடாக சென்று ஆதார் விவரத்தை சேகரித்து வருகின்றனர்.