7 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத வணிக வளாக கடைக்கு 'சீல்'
திருவாரூரில் 7 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாததால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவாரூரில் 7 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாததால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சொத்து வரி
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்துவது வழக்கம். அதே போன்று தொழில் செய்பவர்கள் நகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் நேதாஜி சாலையில் இயங்கி வரும் ஒரு வணிக வளாகத்துக்கு சொத்து வரி என்பது கடந்த 2015-2016-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை செலுத்தப்படவில்லை.
இந்த சொத்து வரியை செலுத்தும்படி மாதம் 2 முறை நேரில் சென்றும், பலமுறை கடிதம் மூலமும் நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும் சொத்து வரி செலுத்தப்படவில்லை.
கடைக்கு சீல்
இந்த வணிக வளாகத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை சொத்து வரி ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் பாக்கி வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின்படி நகராட்சி மேலாளர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் 7 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத காரணத்தினால் அந்த வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்கு 'சீல்' வைத்தனர். உரிய சொத்து வரி செலுத்திய பின்பு சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நீண்ட காலம் தொடர்ந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் பிரபாகரன் எச்சரித்துள்ளார்.