அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்


அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Jun 2023 4:15 AM IST (Updated: 3 Jun 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.

நீலகிரி

கூடலூர்

தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பேரிடர் தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் போக்குவரத்து துறை சிறப்பு செயலாளரும், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.என்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் நீலகிரியில் உள்ள 6 தாலுகாக்களில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய 283 இடங்களில் பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் விழும் மரங்கள், மண் சரிவுகளை உடனுக்குடன் அகற்ற பொக்லைன் எந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும்.

தயாராக இருக்க வேண்டும்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் ஆம்புலன்ஸ், மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். மருத்துவ குழுவினரும் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். இதேபோல் மின்வாரியத்தினரும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் பேரிடர் சமயத்தில் பழுதடைந்தால் மின் பணியாளர்களுடன் விரைவாக பணி மேற்கொண்டு, தடையின்றி மின்விநியோகம் செய்ய வேண்டும். இதேபோல் நிவாரண முகாம்களும் அமைக்க வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் மண் சரிவு ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திட்டம் விரிவுபடுத்தப்படும்

தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. முன்னதாக நகராட்சி, பேரூராட்சி, காவல், தீயணைப்புத்துறை, மின்வாரியம் சார்பில் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த பல்வேறு உபகரணங்களை கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ், கலெக்டர் அம்ரித் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக தமிழக அரசின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கூடலூரில் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் மாவட்டம் முழுவதும் வருகிற ஜூலை மாதம் விரிவுபடுத்தப்படும் என்றார்.


Next Story