லாரிகளை தடுத்து நிறுத்தும் அதிகாரிகள்
கேரளாவில் இருந்து கூடலூருக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அவர்கள் பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்
கேரளாவில் இருந்து கூடலூருக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அவர்கள் பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கட்டுமான பொருட்கள்
தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் பகுதியில் கூடலூர் உள்ளது. இங்கு பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் கர்நாடகா மற்றும் கோவையில் இருந்து வருகிறது. மேலும் குறைந்த தூரம் என்பதால் கேரள மாநிலம் நிலம்பூர் பகுதியில் இருந்தும் கட்டுமான பொருட்கள் கூடலூர், பந்தலூர் தாலுகாவுக்கு தினமும் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து கட்டுமான பொருட்களை அதிக சுமையுடன் ஏற்றி வருவதாக வாகன உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். இதன் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினர்.
எல்லையில் தடுத்து நிறுத்தம்
இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கேரளா-கூடலூர் எல்லையில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதன்படி நேற்று அதிகாலையிலும் கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை அதிகாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தி வைத்தனர். இதனால் கூடலூர் பகுதியில் கட்டுமான பொருட்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளதாக கட்டுமான தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விலை உயரும்
இது குறித்து கட்டுமான தொழிலாளர்கள் கூறியதாவது:-
கூடலூரில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரம் உள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று கட்டுமான பொருட்கள் ஏற்றி வருவதால் பல மடங்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள கேரளாவின் நிலம்பூரில் கட்டுமான பொருட்களை எடுத்து வருவதால் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சராசரியாக தினமும் 50 டிப்பர் லாரிகளில் கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இதை தடுத்து நிறுத்துவதன் மூலம் கூடலூரில் கட்டுமான பொருட்களின் விலை உயரும். மேலும் சாதாரண, ஏழை எளிய மக்கள் மத்திய அரசின் கீழ் கட்டப்படும் வீடுகளை கட்ட முடியாத நிலை ஏற்படும். பெரிய ஒப்பந்ததாரர்கள் சொந்தமாக வைத்துள்ள லாரிகளில் விதிமுறைகளை மீறி கட்டுமான பொருட்களை ஏற்றி வந்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
ஆனால் சாதாரண மக்களுக்கு கொண்டு வரக்கூடிய கட்டுமான பொருட்களை பாரபட்சத்துடன் தடுத்து நிறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.