விதைச்சான்றளிப்பு பணிகளை அதிகாரி ஆய்வு
கோவில்பட்டி பகுதியில் விதைச்சான்றளிப்பு பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு விதைச்சான்றளிப்பு பணிகளை சென்னை அதிகாரி ஆய்வு ெசய்தார்.
விதைப்பண்ணையில் ஆய்வு
சென்னை விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவர் கோவில்பட்டி துறையூர் கிராமத்தில் விதைப் பண்ணை விவசாயி கார்த்திக் சாகுபடி செய்து உள்ள கம்பு, தனசக்தி ஆதார நிலை விதைப்பண்ணையை ஆய்வு செய்தார்.
விவசாயிகளுக்கு தரமான சான்றளிக்கப்பட்ட விதைகளை வழங்கும் பொருட்டு விதைப் பண்ணையில் வயல் தரங்களை ஆய்வு செய்தார். அப்போது கலவன் நீக்குதல், நோய்கள் தாக்கப்பட்ட கதிர்களை அகற்றுதல் மற்றும் விலகு தூரம் பராமரித்தல் ஆகியவை குறித்தும் அறிவுரை வழங்கினார்.
அலுவலர்களுக்கு அறிவுரை
மேலும் கோவில்பட்டி அரசு விதைச்சுத்தி நிலையத்தில் நடைபெற்ற சான்றட்டை பொருத்தும் பணிகளை ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகளை வழங்கும் பொருட்டு சுத்திப்பணி மற்றும் சான்றுஅட்டை பொருத்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விஜயா, தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சுரேஷ், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி விதைச்சான்று அலுவலர்கள், கோவில்பட்டி விதை ஆய்வாளர் மற்றும் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு உதவி விதை அலுவலர்கள் உடன் இருந்தனர்.