விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க அதிகாரி அறிவுறுத்தல்
விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க அதிகாரி அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் முன்னிலை வகித்தார். இதில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாய பம்புசெட் ஓடவில்லை, இதனால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை, எனவே புதிதாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின்மாற்றி அமைத்து மின் வினியோகம் வழங்க வேண்டும். மக்கள் நலன் கருதி மின் அலுவலகம் அமைக்க வேண்டும். மின்தடையை சரி செய்ய வேண்டும். முறையாக மின் வினியோகம் செய்ய வேண்டும். காலதாமதமின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின்நுகர்வோர்கள் மனுக்கள் அளித்தனர்.
கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி பேசுகையில், மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெற்றுள்ள மனுக்களை சம்பந்தப்பட்ட மின் அலுவலர்களிடம் அளித்து போர்க்கால அடிப்படையில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மின் நுகர்வோர்களின் புகார்கள் மீது கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் குறைகளை தீர்வு செய்ய வேண்டும். மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்க துரிதமாக செயல்பட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பினை முன்னுரிமை அடிப்படையில் காலதாமதமின்றி வழங்க வேண்டும். இயற்கை சீற்றங்கள், பேரிடரால் ஏற்படும் மின் தடை, மின் கம்பம் விழுதல், பழுது ஏற்படுதல் போன்ற குறைபாடுகளை அவசர நிலையில் களைய வேண்டும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.