விதைதரத்தை ஆய்வு செய்து நிலக்கடலையை சாகுபடி செய்ய அதிகாரிகள் அறிவுரை
மானாவாரியில் அதிக வருமானம் பெற விதைதரத்தை ஆய்வு செய்து நிலக்கடலையை சாகுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு, வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
நிலக்கடலை சாகுபடி
வேலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி இந்த மாதத்தில் மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும். ஏனெனில் இந்த பயிருக்கு குறைந்த நீர், உரம், பயிர் பாதுகாப்பு மருந்து பயன்படுத்திாலே போதும்.
இதுமட்டுமல்லாமல் இது ஒரு நடுத்தர காலபயிர் ஆகும். டி.எம்.வி.-14, தாரணி, வி.ஆர்.ஐ.-8, கே.1812 ரகங்கள் பயிரிட ஏற்றதாகும். இவற்றில் ஏதாவது ஒரு ரகத்தினை தேர்வு செய்து நல்ல தரமான விதையினை ஏக்கருக்கு 56 கிலோ என்ற அளவில் 30 சென்டி மீட்டர் வீதம் வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைகளை விதைப்பு செய்ய வேண்டும்.
நிலக்கடலைக்கு ஏக்கருக்கு தேவைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்து இடவேண்டும். இத்துடன் 80 கிலோ ஜிப்சத்தை அடியுரமாகவும், மேலும் 80 கிலோ ஜிப்பசத்தினை 2-ம் களையெடுப்பின் போதும் இட்டு நன்கு மண் அணைக்க வேண்டும்.
அதிக லாபம்
தரமான விதைகளே உயர் விளைச்சலுக்கு வழிவகுக்கும். மேலும் ஊடுபயிராக பயறு வகையான உளுந்து பச்சைபயறு, காராமணி ஆகியவற்றை பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். தரம் அறியாமல் பயிர் செய்தால் பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நிலக்கடலையில் எண்ணை சத்து 49 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை இரகத்துக்கு ஏற்றவாறு இருக்கும். இதனால் நாளாக நாளாக முளைப்பு திறன் குறையும். இதனால் மகசூல் குறைந்து வருவாய் குறைவு ஏற்படும்.
இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகள் தற்காத்துக் கொள்ள தங்கள் கைவசம் வைத்திருக்கும் விதைகளை விதைப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு 500 கிராம் அளவுக்கு விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து விதையின் தரத்தினை அறிந்து கொள்ள வேண்டும். விதைப்பு செய்வதன் மூலம் கூடும் மகசூல் கிடைக்கும் என விதை பரிசோதனை நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.