"மக்கள் வரிப்பணம் வீணடிப்புக்கு அதிகாரிகள்தான் காரணம்" ஐகோர்ட்டு கண்டிப்பு
“மக்கள் வரிப்பணம் வீணடிப்புக்கு அதிகாரிகள்தான் காரணம்” ஐகோர்ட்டு கண்டிப்பு.
மதுரை,
மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த ராஜேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததற்கான உரிய தொகையை அரசு ஊழியருக்கான இன்சூரன்ஸ் தொகையிலிருந்து எனக்கு வழங்கும்படி விண்ணப்பித்தேன். எனது மனு நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உரிய இன்சூரன்ஸ் தொகையை எங்களுக்கு 6 சதவீத வட்டியுடன் அளிக்கும்படி 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனாலும் அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜரானார்கள். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் தரப்பினருக்கு கோர்ட்டு உத்தரவின்படி உரிய தொகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, 2019-ம் ஆண்டில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது மனுதாரருக்கு எவ்வளவு தொகை வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வக்கீல் 6 சதவீத வட்டித்தொகை செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
அதற்கு நீதிபதி, கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தவுடன் இன்சூரன்ஸ் தொகையை செலுத்தி இருந்தால் வட்டி செலுத்த தேவையில்லை. மக்களின் வரிப்பணத்தை வட்டியாக செலுத்துவதா? இதற்கு அதிகாரிகள்தான் காரணம். இது போன்ற அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கண்டிப்புடன் கேள்வி எழுப்பினார்.
பின்னர் இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.