செஞ்சி அருகே வாடகை செலுத்தாதவர்களின்கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய வியாபாரிகள்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
செஞ்சி அருகே வாடகை செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை வியாபாரிகள் தடுத்து நிறுத்தினர். பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி,
செஞ்சியை அடுத்த அனந்தபுரம் அருகே பனைமலை ஊராட்சிக்கு உட்பட்டது உமையாள்புரம் பகுதி. இங்கு உள்ள தாளகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 100-க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் கடைகளும் வைத்து இருக்கிறார்கள்.
இதில் கோவிலுக்கு சிலர் வாடகை கொடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் வாடகை கொடுக்காமல் இருந்தவர்களின் கடைகளில் இருந்த பொருட்களை காலி செய்து, சீல் வைப்பதற்காக நேற்று இந்து சமய அறநிலைத்துறையினர் சென்றனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
அப்போது அங்கு கடை வைத்து இருக்கும் வியாபாரிகள் ஒன்று திரண்டு, வந்து அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். அதேபோன்று, வாடகை செலுத்தாமல் வீடுகளில் வசிப்பவர்களையும் காலிசெய்ய வலியுறுத்த சென்றதாக கூறி, பொதுமக்களும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பெண், தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடன் அங்கிருந்த அனந்தபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நடராசன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார். பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
அதன்பேரில், அனந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் விஜயராணி, தாசில்தார் ஞானம், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி,. இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது வாடகை செலுத்தாத நபர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையை தற்போது செலுத்தி விடுவதாகவும், மீதுமுள்ள தொகையை செலுத்த கால அவகாசம் வழங்குமாறு தெரிவித்தனர். இதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதன் பேரில், சீல் வைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.