ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொக்லின் எந்திரத்துடன் வந்த அதிகாரிகள்


ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொக்லின் எந்திரத்துடன் வந்த அதிகாரிகள்
x

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொக்லின் எந்திரத்துடன் வந்த அதிகாரிகள்

தஞ்சாவூர்

தஞ்சை கரந்தை குஜிலியன் குளக்கரையில் உள்ள வீடுகளை ஆக்கிரமிப்பு செய்ததாக அதிகாரிகள் இடிக்க பொக்லின் எந்திரத்துடன் வந்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

குஜிலியன் குளம்

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் உள்ளது குஜிலியன்குளம். இந்த குளத்தின் மேல்கரையில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டது. இந்த குளம் அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான குளம் ஆகும்.

இந்த குளத்தின் வலது கரை மற்றும் கீழ் கரையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இடிக்க உத்தரவு

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குஜிலியன் குளமும் புனரமைக்கப்பட்டு சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட உள்ளது.

இதையடுத்து குளத்தின் வடகரை மற்றும் கீழ்கரையில் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு அனுப்பினர். மேலும் 1-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யாவிட்டால் வீடுகளை இடிக்கப்போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று வீடுகளை இடிப்பதற்காக பொக்லின் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், ஆறுமுகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். ஆனால் அவர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எங்களுக்கு நாங்கள் குடியிருக்கும் வீடுகளையே ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் மாற்று இடம் கொடுத்து விட்டு வீடுகளை இடிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மேலும் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்ளின் மற்றும் போலீசாரும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

மேலும், நீர் நிலையில் ஆக்கிரமிப்பு உள்ளதால் இடிக்கப்போவது உறுதி. நீங்கள் அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். அதுவரை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பொக்லின் எந்திரத்தை எடுத்துச்சென்றதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story